சனி, 7 மே, 2011

பிற்பகல் 2:31:00 - ,, No comments

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...இவள்
தனிமைச் சிறையிலே
தவம் கிடந்து
இளமைத் தேடலில்
இரவைத் தொலைத்தவள்

சாதகம் என்னும்
சமூகச் சகதிக்குள்
சிக்க்கிச் சிதைந்து போனவள்.

மணப்பெண்ணாய்
காட்சியளித்தே
மங்கைப் பருவத்தை 
இழந்து போனவள்

சாஸ்திரம் பேசும்
சமூகக் குருடர்களின்
கால்களில் விழுந்தே
முதுகெலும்பு
முடமாகிப் போனவள்.

தேசிங்குராஜன்
தேரேறி வருவான் என
தேதி கிழித்தே
தேய்ந்து போனவள்.

ஏ!சமூகமே 
இந்த புல்லாங்குழல்
மூங்கிலாய் முளைக்கும்போதே
ஊமையாகும்படி
உத்தரவிட்டது யார்?

இந்த
மௌனக்குருத்து
மலர்வதற்கு முன்னரே
சருகாகும்படி 
சபித்தது யார் ?

சாதகத்தோடு
பொருந்தாது போனால்
இவளின் இளமைக்காலம்
பட்டினி கிடந்தே
நரைக்க வேண்டுமா?

ஆணாதிக்கத்தின்
அழுக்கு துடைத்தே
தன்னை அழுக்காக்கிக்
கொண்டவள்தானே
இந்த பெண்மை.
பிறகு ஏன்?
இவளின் இளமைக்குச்
சிறகுகள் கிடைத்தும்
பறந்து செல்வதற்கு
வானம் வாய்க்கவில்லை.

கருவறையென்னும்
இருட்டறைக்குள்
கருக்கொண்டதால்
இவளது கனவுகளும் 
கருப்பாகிப் போனதா?

"பிணம் தின்னும் சாஸ்திரங்கள்"
சொல்லியே
பெண்மையை  
அறியாமைச் சிறைக்குள் 
அடைத்து வைத்த 
ஆண் வர்க்கமே ?

இவளின் கைகளில்
விளக்குகளைத் தந்துவிட்டு
திரிகளை ஏன்
திருடிக்கொண்டீர்கள்?

இதழ்களைத்
தந்துவிட்டு
புன்னகையை -ஏன்
புடுங்கிக் கொண்டீர்கள் ?

இன்னும் உங்கள்
சுயம்வர மண்டபத்தில்
இவளின் அழுகுரல்
கேட்கவே இல்லையா?

இல்லை ...
சங்ககாலம் தொட்டு
சமகாலம் வரை
இவளின் கண்ணீர் இன்னும்
பரீசிலிக்கப்படவே
இல்லையா?

போதுமடி
என் தோழி 
போதும்....

சமூகவாதிகளுக்கு
செவிசாய்த்தே-உன்
செவி நரம்புகள் சேதப்பட்டது
போதும்....

ஆணாதிக்கம்
பற்ற வைத்த
அடக்குமுறை
நெருப்பில்-நீ
மெழுகுவர்த்தியாய்
எரிந்தது போதும்...

அறியாமை என்னும்
தடைகளைத் தகர்த்து
அடிமை விலங்கை
உடைத்தெறி...

சருகாகும்படி
உன்னை சபித்த
சமூகவாதிகளை-உன்
விழி நெருப்பால்
பொசுக்கு.

"பிணம் தின்னும் சாஸ்திரங்களை"
எரித்தே - உன்
பெண்மையை உசுப்பு!

வருகிற நூற்றாண்டிலாவது
உன் பருவங்கள்
புசிக்கப்படட்டும்....
புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்.....

0 கருத்துகள்: