திங்கள், 26 மார்ச், 2012

பிற்பகல் 6:17:00 - , No comments

சுட்ட வடு


குடந்தைத் தீ! 

கும்பகோணம்
"தீ" விபத்து
இந்தியாவின்
இதயத்தில் விழுந்த
இரக்கமில்லா குத்து ...

கல்வியில்லா கற்காலத்தில்
காக்கை,குருவிகளைத்தான்
எரித்தார்கள்.
கல்வியிருந்தும் கலியுகத்தில்
குழந்தைகளை
எரிக்கிறார்கள்...

எதிர்காலத்தை வளமாக்க
புத்தகம் ஏந்திச் சென்ற
புல்லாங்குழலை
கல்விக் கூடங்கலல்லவா
கல்லறையாக்கியிருக்கிறது...

ஏ!அக்னி பகவானே!

அப்படியென்ன கோபம்
உனக்கு -அந்த
மழலைப் பிஞ்சுகள் மீது...

ஆத்திசூடி படித்த

குழந்தைகளின்
கூடாரத்திற்குள் சென்று
தீயைத் தூவியல்லவா
தின்றிருக்கிறாய்...

ஐம்பெரும் பூதங்களே !

நீங்களும்
மனித நேயமில்லாத
மனிதரினம் தானா?

அரசியல் வியாபாரிகளே!

லட்சுமியை வாங்கி
சரஸ்வதியை விற்றதால்
நாங்கள் இழந்தது
எங்கள்
எதிர்கால இந்தியாவின்
லட்சியங்களை...

கும்பகோணத்தில்

பற்றிய "தீ"
கல்விக்கூடாரத்தில்
அல்ல...
அசோகச் சக்கரத்தின்
அச்சில்...

வள்ளுவனே - உன்

குறளை மாற்றியெழுது.
தீயினால் சுட்டது
எங்களுக்கு
இன்னும் ஆறவில்லை...

குடந்தை எல்லாம்

கோயில்கள் இருந்தும்
குழந்தையெல்லாம்
கருகும்போது
கும்பிட்ட கடவுளரே
நீயெல்லாம்
குருடாகிப்போனாயோ...

ஏ!அக்னியே!

உன் வெம்மை பட்டு
எங்கள்
வெண்குஞ்சுகள்
வெந்து போகுமென்று
முன்னமே
தெரிந்திருந்தால்
சிக்கி முக்கிக் கல்லைக்கூட
நாங்கள்
சீண்டியிருக்க மாட்டோம்...

0 கருத்துகள்: