திங்கள், 26 மார்ச், 2012

மன்னிக்க முடியாது

         
கடலே!
உன்னை மன்னிக்க முடியாது
நீ கோபத்தைக்
கொப்புளித்துத் துப்பியதால்
உலக வரைபடம்
உருமாறிப்போயிருக்கிறது.

விழித்த சூரியனுக்கும்
வீசிய காற்றுக்கும்
விஷயம் தெரியாமல்
விழுங்கிச் சென்றாயே?

உன் ஆன்மாவுக்கு
மனித வாடைதான்
பிடித்தமானதா.

பூவையும் புள்ளிதழையும்
புதைக்கச் செய்யும்
நச்சுச் சிந்தனையை உன்னுள்
பதியம் போட்டது யார்?

வயிற்றுப் பசிக்காய்
வலை வீசியவரின்
பசி தீர்க்காமல்
நீயேயல்லவா
விழுங்கிக் கொண்டாய் .

கரையேறி - நீ
சுற்றிய பம்பரத்தால்
எங்கள் நட்சத்திரங்களின்
கனவுகளல்லவா
நசுங்கிப் போயிருக்கிறது

பசித்த குழந்தைக்கு
பாலூட்டும்
தாயின் மார்புகள்
புழுக்கள் குடைந்தல்லவா
புரையோடிப் போயிருக்கிறது

கடலே !
மனிதர்களின்
மாமிசத்தைப்
பச்சையாய்த் தின்னும்
உன்னை
மாதா என்று எப்படியழைப்பது?

என் மக்களின்
விழிகளின் ஓரம்
விரவிய நீர்
கண்டுமா - உன்
கோபத்தின் கனல்
குறைய மறுத்தது.

இறந்தவர்களின்
சடலம் பார்த்து
இருப்பவர்கள்
வடித்த கண்ணீர்
உன்னைவிட அதிகம்
உப்புக் கரிக்கிறது

உயிர்களின் மீது
வேகமாய்ப் பரவி
வெடுக்கென்று புடுங்கினாயே
இரண்டொரு நிமிடத்தில்
திருப்பித் தரமுடியுமா
உன்னால் ?

பிணங்களின் மீது
பித்தேறிய உன்னை
தாயென்று எவனோ
தவறாய்ச் சொல்லியிருக்கிறான்?

பூமிப் பந்தின் மீது
புயலாய் வீசியதால்
உறவுகளை இழந்த
மனிதர்களின்
மார்புகள் யாவும்
நெருப்பு வைக்கமாலேயே
எரிந்து கிடக்கிறது.

மண்ணில் புதைந்தவர்களின்
கண்ணீரைக் குடித்து
கனவுகளின் மீது
கால் வைத்து மிதித்த
நீயும் ஒரு நாள்
சுருங்கித்தான் போவாய் ...

அதுவரை
உன்னை மன்னிக்க முடியாது...

0 கருத்துகள்: