புதன், 15 மே, 2013

செவ்வாய், 14 மே, 2013

மனசும் காதலும்...




















அருவியில் சாரல்கள் 
குதித்து 
விளையாடுவது போல 
எனக்குள்ளும் 
குதித்து 
விளையாடுகிறது 
உன் மனசும் 
என் காதலும்...
...............................................................................
வண்ணத்துப் பூச்சிகள்
வட்டம்
அடிக்கும்போதே 
எனக்குச் சந்தேகம் -நீ 
பூப்பறிக்கச் 
சென்றிருக்கிறாய்...
...............................................................................


அழகியல்
























சகியே !
தெய்வங்கள் எல்லாம் 
கோயிலில்தானே 
குடியிருக்கும் 
பிறகு நீ மட்டும் 
எப்படி வீட்டுக்குள்...
.............................................................................
அடிக்கடி 
வந்துவிட்டுப்போ.
அப்படியாவது 
பூத்துக்கொள்ளட்டும் 
"எங்கள் வீட்டு ரோஜா செடி"
...............................................................................
மழை நின்ற பிறகும் 
மரங்கள் தேக்கி வைத்திருக்கும் 
மழைத்துளிகளைப் போல 
நீ வந்து போன 
பிறகும் கூட 
உன் நினைவுகள் மட்டும் அப்படியே .....
..................................................................................

வியாழன், 7 ஜூன், 2012

ஈழம் மலரட்டும்...

புறப்படு  தமிழா !
புறப்படு !
நம் இனத்தின் முதுகெலும்பில்
சிங்களக்கோடரி கொண்டு தாக்கிய
சினம்பிடித்தவனின் இரத்தத்தில்
நம் தமிழை குளிர்விப்போம் !
வந்தவனை எல்லாம்
வாழ வைத்தே
வாழ்விழந்தவனே !
என் சோதரனே !
தமிழ்ச்சாதியே !
போதுமடா...

நம் தாயின் மடியில் அயலவனை
தூங்க அனுமதித்து
நீயும்  நானும்
தூக்கம் மறந்தது போதும்.

நம் சகோதரிகளை
இன வெறியனுக்கு
தின்னக்கொடுத்தது போதும்.

நம் பிஞ்சுகள் மீது
குண்டுகள் துளைத்து
குடியேறியது போதும்.

தமிழனின் மார்புகளை
சிங்களப்புழுக்கள்
தின்னு கொழுத்தது போதும்.

பள்ளங்களில் பதுங்கியே
நம் சகோதரிகள்
தமிழின் கற்பைக்
காப்பாற்றியது போதும்.

பள்ளிக்கூடங்களே
குழந்தைகளின்
பச்சை உயிர் குடித்த்தது போதும்.

இரவல் கொடுத்தே
இனத்தை இழிவு படுத்தியது போதும்.

வீரம் செறிந்தே வாழ்ந்த இனம்
வீதிக்கு வந்தது போதும்.

இனியும் கதைகள்
பேசிப்பயனில்லை.

நடுவண் அரசை நம்பியே
நாம் நாசமாய்ப் போனது போதும்.

துருப்பிடித்த புராணங்களை
தாங்கிப் பிடித்தே
தமிழன் செத்ததெல்லாம் போதும்.

போதும் .
போதும்
போதுமடா ....

நம் விழியின் சிவப்பின்
வெம்மைபட்டு
செத்து மடியட்டும் சிங்களம்.

நீயும் நானும்
மொத்தமாய்ப் புறப்பட்டால்
சிங்களம் என்னடா
சீண்டுபவன் எவனையும்
சிதைக்கலாம்.

நம் மொழியின் மீதும்
இனத்தின் மீதும்
தீப்பற்றி எரிகிற போது
தொலைக்காட்சியை
தொண்ணாந்து பார்த்தது போதும்

புறப்படு தமிழா-நீ
புலியெனப் புறப்படு!

தமிழின்  கூர்மை பட்டு
தமிழன் நெருப்பு பட்டு
எரியட்டும் சிங்களம்
இனி மலரட்டும் ஈழம்.....................

திங்கள், 26 மார்ச், 2012

பாசமான பாட்டிக்கு



ஆசையா வளர்த்தவளே!
மூனாங்கிளாசு படிக்கையில
முன்னாடியே கட்டிக்கொடுத்தா
மிச்சம் கிச்சம் வச்சுபுடுவேன்னு
மூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ...

வெட்கம் விட்டு
சொல்லுறேன்.
வத்தக் குழம்பு சாப்பிட்டு
வருஷக்கணக்காகுது.
மணத்தக்காளி சாப்பிட்டு
மாசக்கணக்கு ஆகுது 
நல்ல காப்பி குடிச்சு 
நாலு நாளு ஆகுது.

உலையில அரிசிபோட கத்துக்கோ
ஒத்தாசையா இருக்கும்னு
சொன்னதா ஞாபகம்.
ஒரு நாளு பசியில
உலையில சோறு வைக்க
அந்த  சாதம்
வேகாத கதை சொல்லவா
வெந்து போன
விரலோட வினையச் சொல்லவா
வகையா வந்த கஞ்சிய
குடிச்ச விஷயம் சொல்லவா

பத்து மணி ரயிலுக்கு
ஆறு மணிக்கே நீ வருவ
பத்து நிமிஷம் தாமதம்னா
பதறிப் போயிடுவ 
விமானத்துல போறேன்
வெளிநாடு போறேன்
விடிய விடிய நானும்தான்
வேலைக்கும் போறேன்
விடிஞ்சு வரும் போது
விழுந்ததும்
நான் துடிச்சதும்
ரெத்தம் வழிஞ்சதும்
தண்டவாளதுக்கு
மட்டுந்தான் தெரியும்

அஞ்சு மணிக்கு
எழுந்தரிச்சு
அரக்க பறக்க சமைச்சு
அக்கா தங்கச்சி
சண்டையெல்லாம்
சமாளிச்சு
என்
ஆறடி முடிய
சிக்கெடுத்து சீவி
அரைமுழ
ரிப்பன் கட்டி அனுப்பிவச்ச

ஆறடி முடி இப்ப
அரையடி ஆச்சு
அதைச்  சீவாம
இருப்பதே
பேஷனா போச்சு

சொர்க்கத்து  பாட்டிக்கு
சொப்பனத்துலேயே
கடுதாசி எழுதற
இந்த பேத்திக்கு
இன்னும்
ஒரே ஒரு ஆசை பாக்கி

முழுகாம இருக்கறேன்
மூணு மாசம் ஆச்சி
கத்திரி போட்டு கிழிச்சாலும்
கத்தி வலிச்சு பிரசவிச்சாலும்
ரெத்தின வாக்கு
மாறாம
முத்து முத்தா
என் வயித்துல
வந்து
பொறந்திடு தாயி.....

நீதான் !















இன்னல்கள் பல

இருதயத்தின்

இடதுபுறம் குத்தும்.


அவமானங்கள்-உன்

அறிவுத்திறனை

அசிங்கப்படுத்தும்.


சந்தர்ப்பங்கள்-உன்

சாதனைப்பக்கங்களில்

எச்சில் துப்பும்.


உனது நடைபாதையில்

முட்கள் மட்டுமே

முண்டியடித்து முளைத்திருக்கும்.


வானத்தை

வெறித்துப்பார்ததே

வயது முதிர்ந்திருக்கும்.


கண்கள் கண்ணீர்

வடிக்காது-ஆனால்

நெஞ்சு மட்டும்

கொதிக்கும்.


வேலை கேட்ட

விண்ணப்பித்த இடமெல்லாம்

'நாய்கள் ஜாக்கிரதை'

அறிவுப்பு பலகையே

அதிகம் தொங்கும்.


உறவுகளெல்லாம் கூடி

உதவாக்கரையென

அடிக்கடி உச்சரிக்கும்.


எதிர்வீடும்

அண்டைவீடும்

எள்ளி நகையாடும்.


தொப்புள்கொடி

உறவில் கூட

தொய்வு ஏற்படும்.


கண்களுக்கு

காலைச்சூரியன்

கனவில் மட்டுமே

உதிக்கும்.


முழுநிலவும்

உன்னைக்காணாது

முகம் மறைத்துப்போகும்.


அவ்வப்போது

சிந்தனை நரம்புகள்

சிதறிச்சேரும்.


இத்தனையும்

உனக்குள் சப்தமில்லாமல்

மொத்தமாக நிகழ்கிறதா?


துவண்டு போகாதே

தொடர்ந்து வா!

வரும்

நூற்றாண்டின்

சாதனையாளனே

நீதான்.......

மன்னிக்க முடியாது

         
கடலே!
உன்னை மன்னிக்க முடியாது
நீ கோபத்தைக்
கொப்புளித்துத் துப்பியதால்
உலக வரைபடம்
உருமாறிப்போயிருக்கிறது.

விழித்த சூரியனுக்கும்
வீசிய காற்றுக்கும்
விஷயம் தெரியாமல்
விழுங்கிச் சென்றாயே?

உன் ஆன்மாவுக்கு
மனித வாடைதான்
பிடித்தமானதா.

பூவையும் புள்ளிதழையும்
புதைக்கச் செய்யும்
நச்சுச் சிந்தனையை உன்னுள்
பதியம் போட்டது யார்?

வயிற்றுப் பசிக்காய்
வலை வீசியவரின்
பசி தீர்க்காமல்
நீயேயல்லவா
விழுங்கிக் கொண்டாய் .

கரையேறி - நீ
சுற்றிய பம்பரத்தால்
எங்கள் நட்சத்திரங்களின்
கனவுகளல்லவா
நசுங்கிப் போயிருக்கிறது

பசித்த குழந்தைக்கு
பாலூட்டும்
தாயின் மார்புகள்
புழுக்கள் குடைந்தல்லவா
புரையோடிப் போயிருக்கிறது

கடலே !
மனிதர்களின்
மாமிசத்தைப்
பச்சையாய்த் தின்னும்
உன்னை
மாதா என்று எப்படியழைப்பது?

என் மக்களின்
விழிகளின் ஓரம்
விரவிய நீர்
கண்டுமா - உன்
கோபத்தின் கனல்
குறைய மறுத்தது.

இறந்தவர்களின்
சடலம் பார்த்து
இருப்பவர்கள்
வடித்த கண்ணீர்
உன்னைவிட அதிகம்
உப்புக் கரிக்கிறது

உயிர்களின் மீது
வேகமாய்ப் பரவி
வெடுக்கென்று புடுங்கினாயே
இரண்டொரு நிமிடத்தில்
திருப்பித் தரமுடியுமா
உன்னால் ?

பிணங்களின் மீது
பித்தேறிய உன்னை
தாயென்று எவனோ
தவறாய்ச் சொல்லியிருக்கிறான்?

பூமிப் பந்தின் மீது
புயலாய் வீசியதால்
உறவுகளை இழந்த
மனிதர்களின்
மார்புகள் யாவும்
நெருப்பு வைக்கமாலேயே
எரிந்து கிடக்கிறது.

மண்ணில் புதைந்தவர்களின்
கண்ணீரைக் குடித்து
கனவுகளின் மீது
கால் வைத்து மிதித்த
நீயும் ஒரு நாள்
சுருங்கித்தான் போவாய் ...

அதுவரை
உன்னை மன்னிக்க முடியாது...

சுட்ட வடு


குடந்தைத் தீ! 

கும்பகோணம்
"தீ" விபத்து
இந்தியாவின்
இதயத்தில் விழுந்த
இரக்கமில்லா குத்து ...

கல்வியில்லா கற்காலத்தில்
காக்கை,குருவிகளைத்தான்
எரித்தார்கள்.
கல்வியிருந்தும் கலியுகத்தில்
குழந்தைகளை
எரிக்கிறார்கள்...

எதிர்காலத்தை வளமாக்க
புத்தகம் ஏந்திச் சென்ற
புல்லாங்குழலை
கல்விக் கூடங்கலல்லவா
கல்லறையாக்கியிருக்கிறது...

ஏ!அக்னி பகவானே!

அப்படியென்ன கோபம்
உனக்கு -அந்த
மழலைப் பிஞ்சுகள் மீது...

ஆத்திசூடி படித்த

குழந்தைகளின்
கூடாரத்திற்குள் சென்று
தீயைத் தூவியல்லவா
தின்றிருக்கிறாய்...

ஐம்பெரும் பூதங்களே !

நீங்களும்
மனித நேயமில்லாத
மனிதரினம் தானா?

அரசியல் வியாபாரிகளே!

லட்சுமியை வாங்கி
சரஸ்வதியை விற்றதால்
நாங்கள் இழந்தது
எங்கள்
எதிர்கால இந்தியாவின்
லட்சியங்களை...

கும்பகோணத்தில்

பற்றிய "தீ"
கல்விக்கூடாரத்தில்
அல்ல...
அசோகச் சக்கரத்தின்
அச்சில்...

வள்ளுவனே - உன்

குறளை மாற்றியெழுது.
தீயினால் சுட்டது
எங்களுக்கு
இன்னும் ஆறவில்லை...

குடந்தை எல்லாம்

கோயில்கள் இருந்தும்
குழந்தையெல்லாம்
கருகும்போது
கும்பிட்ட கடவுளரே
நீயெல்லாம்
குருடாகிப்போனாயோ...

ஏ!அக்னியே!

உன் வெம்மை பட்டு
எங்கள்
வெண்குஞ்சுகள்
வெந்து போகுமென்று
முன்னமே
தெரிந்திருந்தால்
சிக்கி முக்கிக் கல்லைக்கூட
நாங்கள்
சீண்டியிருக்க மாட்டோம்...

நாசமாய் போகட்டும்...



ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...

எதுவுமே காதில்
விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின்
படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...

கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!தாயே

என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து,
வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!


ஒரு சொட்டுத் தண்ணீருக்காக
விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின்
ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம்
வற்றிப் போகட்டும்!

மழை மேகங்கள்
மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு
எங்களை ஓடவைத்தாய்...

இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம்
தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல்
எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...

உங்கள்
இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு
சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள்
தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!

போர்நிறுத்தம்
கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய்
சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே
இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள்
எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து
அரசாட்சி செய்தவர்களே...

உங்கள் வீட்டு ஆண்கள்
ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக
எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர்
பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில்
அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை
மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக்
கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு
உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து
வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும்
ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு
முளைக்காது போகட்டும்...

அலைபேரலையாய்
பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே
இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்!
நிரந்தரமாகப் போகட்டும்.

செவ்வாய், 14 ஜூன், 2011

ஞாயிறு, 15 மே, 2011

முரண்...


ஊரைக் காக்கும்
சாமியே!
ஒரு இரவு 

உன் ஆலயத்தின்
கதவுகளைத்
திறந்து வை.
விடியற்காலையில்
ஆலயத்தில் நீயிருந்தால் 
நீ சாமி என்பதை
ஒத்துக்கொள்கிறேன்...

சனி, 7 மே, 2011

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...



இவள்
தனிமைச் சிறையிலே
தவம் கிடந்து
இளமைத் தேடலில்
இரவைத் தொலைத்தவள்

சாதகம் என்னும்
சமூகச் சகதிக்குள்
சிக்க்கிச் சிதைந்து போனவள்.

மணப்பெண்ணாய்
காட்சியளித்தே
மங்கைப் பருவத்தை 
இழந்து போனவள்

சாஸ்திரம் பேசும்
சமூகக் குருடர்களின்
கால்களில் விழுந்தே
முதுகெலும்பு
முடமாகிப் போனவள்.

தேசிங்குராஜன்
தேரேறி வருவான் என
தேதி கிழித்தே
தேய்ந்து போனவள்.

ஏ!சமூகமே 
இந்த புல்லாங்குழல்
மூங்கிலாய் முளைக்கும்போதே
ஊமையாகும்படி
உத்தரவிட்டது யார்?

இந்த
மௌனக்குருத்து
மலர்வதற்கு முன்னரே
சருகாகும்படி 
சபித்தது யார் ?

சாதகத்தோடு
பொருந்தாது போனால்
இவளின் இளமைக்காலம்
பட்டினி கிடந்தே
நரைக்க வேண்டுமா?

ஆணாதிக்கத்தின்
அழுக்கு துடைத்தே
தன்னை அழுக்காக்கிக்
கொண்டவள்தானே
இந்த பெண்மை.
பிறகு ஏன்?
இவளின் இளமைக்குச்
சிறகுகள் கிடைத்தும்
பறந்து செல்வதற்கு
வானம் வாய்க்கவில்லை.

கருவறையென்னும்
இருட்டறைக்குள்
கருக்கொண்டதால்
இவளது கனவுகளும் 
கருப்பாகிப் போனதா?

"பிணம் தின்னும் சாஸ்திரங்கள்"
சொல்லியே
பெண்மையை  
அறியாமைச் சிறைக்குள் 
அடைத்து வைத்த 
ஆண் வர்க்கமே ?

இவளின் கைகளில்
விளக்குகளைத் தந்துவிட்டு
திரிகளை ஏன்
திருடிக்கொண்டீர்கள்?

இதழ்களைத்
தந்துவிட்டு
புன்னகையை -ஏன்
புடுங்கிக் கொண்டீர்கள் ?

இன்னும் உங்கள்
சுயம்வர மண்டபத்தில்
இவளின் அழுகுரல்
கேட்கவே இல்லையா?

இல்லை ...
சங்ககாலம் தொட்டு
சமகாலம் வரை
இவளின் கண்ணீர் இன்னும்
பரீசிலிக்கப்படவே
இல்லையா?

போதுமடி
என் தோழி 
போதும்....

சமூகவாதிகளுக்கு
செவிசாய்த்தே-உன்
செவி நரம்புகள் சேதப்பட்டது
போதும்....

ஆணாதிக்கம்
பற்ற வைத்த
அடக்குமுறை
நெருப்பில்-நீ
மெழுகுவர்த்தியாய்
எரிந்தது போதும்...

அறியாமை என்னும்
தடைகளைத் தகர்த்து
அடிமை விலங்கை
உடைத்தெறி...

சருகாகும்படி
உன்னை சபித்த
சமூகவாதிகளை-உன்
விழி நெருப்பால்
பொசுக்கு.

"பிணம் தின்னும் சாஸ்திரங்களை"
எரித்தே - உன்
பெண்மையை உசுப்பு!

வருகிற நூற்றாண்டிலாவது
உன் பருவங்கள்
புசிக்கப்படட்டும்....
புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்.....

தீ!


நீயென்ன
சிக்கிமுக்கிக்
கல்லுக்கு
சிநேகிதியா?
உன் பார்வை
என்னை
உரசுகிரபோதேல்லாம்
உயிருக்குள்
பக்கென்று
தீப்பிடிக்கிறது