வெள்ளி, 6 மே, 2011

பட்டணத்து மச்சானும் ...

பட்டணத்து மச்சானும் பட்டிக்காட்டு மச்சினியும் )


                                 
மச்சான்:

கண்மாய்க் கரையோரம்
களத்து மேட்டோரம்
வண்ணான் தொறையோரம்
வளைஞ்சு ஓடும் வரப்போரம்
நாணல் புல்லாட்டம்
நடையளந்து போறபுள்ள
நாங்கூறும் சங்கதிய
நாலு வார்த்தை கேளுபுள்ள...

மச்சினி:


சவுக்கு மரமாட்டம்
சந்தன மரமாட்டம்
உதிக்கும் நிலவாட்டம்
உருண்டோடும் தண்ணியாட்டம்
வெளஞ்ச நெல் போல
வெவரமாப் பேசுற மச்சான்
வெறசாச் சொல்லிப் போங்க
வெறகு எடுக்க நான் போணும்...

மச்சான்:

பூசணிக் கொடி போல
பூத்து நின்னவளே!
உதட்டுச் சிரிப்பால
உசிரறுத்துப் போறவளே ...
பூங்காத்து வீசியிருக்கு
புளியம்பூ பூத்திருக்கு
அத்தமக உனைப்பார்க்க
அடிமனசு பசிச்சிருக்கு...

மச்சினி :


எட்டுமைலு தாண்டி
இளந்தமுள்ளு வேலிதாண்டி
பட்டமர விறகு தேடி
பாதகத்தி நான் போறேன்...
உச்சி வெயிலுக்குள்ளே
வூடு போய்ச் சேரணும்
ஒக்காந்து பேசினா
எம்பொழப்பு போயிரும்...

மச்சான்:


அரைச்ச சந்தனம் நீ
ஆகாச சூரியன் நீ
உள்ளத்தில் குதிச்சு - என்
உயிரள்ளிக் குடிச்சவ நீ ...
தனியாகத் தவமிருக்கேன்
தவம் கிடந்து பசிச்சிருக்கேன்
உன்னோடு சேரத்தான்
உசுறு வச்சுக் காத்திருக்கேன் ...

மச்சினி :

பட்டமர விறகுலதான்
பாதகத்தி பொழப்பிருக்கு
பட்டியாடு மேய்ப்புலதான்
பசிக்கும் வயிறு நெறஞ்சிருக்கு
ஓட்டுப் போட்ட உடையிலதான்
உடல்கூட மறைஞ்சிருக்கு
ஒதுங்கிப்போன குப்பைகிட்ட
ஒங்களுக்கென்ன புடுச்சிருக்கு?

மச்சான்:


பட்டணத்து மச்சானிருக்க
பட்டமர விறகு எதுக்கு
பால்சோறு பக்கமிருக்க
பட்டியாடு மேய்ப்பெதுக்கு...
ஒட்டுப்போட்ட உடைக்குள்ளே
ஓவியந்தான் மறைஞ்சிருக்கு
ஒதுங்கிப்போன குப்பையில
ஒசந்த நிலா ஒளிஞ்சிருக்கு ...

மச்சினி :


இங்கிலீசு படிச்சவுக
இங்கிதம் தெரிஞ்சவுக
பட்டணத்தில் படிச்சு
பாராட்டு பெத்தவுக 
பாறாங்கல்லு மேல
பூப்பூக்க வாய்ப்பில்ல
பட்டிக்காட்டு பருத்தியிவ
படிச்சதெல்லாம் ஒண்ணுமில்ல...

மச்சான் :

கூவும் குயில் ராகம் கற்க
குருகுலம் போனதில்ல
விந்தை செய்யும் மின்மினிகள்
விஞ்ஞானம் கற்றதில்ல
பாட்டுப் பாடும் பறவையெல்லாம்
பாடம் கற்றுப் பார்த்ததில்ல
பாசத்தோடு நீயிருக்க
படிப்பெதுக்கு வாடிபுள்ள ...

மச்சினி :

பருவம் நெறஞ்ச சூரியனே
பாசம் பழுத்த சந்திரனே
அடிமாட்டுச் சிறுக்கிமேல
ஆசைப்பட்ட மம்முதனே
நரக நதிவழியே
நடையளந்து போறவள
நெஞ்சுக்குள்ளே தைக்காதீக
நேசம் வச்சு போகாதீக...

மச்சான் :


மனசுக்குள்ளே நின்னுக்கிட்டே
மல்லிகைப்பூ பறிச்சயடி
மத்தாப்பாச் சிரிச்சுக்கிட்டே
மனச ஒடச்சுப் போறயடி...
இலவம் பஞ்சே உனக்காக
இளைய மகன் நோகுறேன்
இல்லேன்னு சொல்லிவிடு
இப்போதே சாகுறேன்...

மச்சினி:


உசுறு வச்சுப் போற மச்சான்
உள்ளம் கலங்கிப் போகாதீக
அடிமாட்டுச் சிறுக்கி என்ன
அழவச்சுப் பார்க்காதீக.
இங்கிலீசு படிச்ச மச்சான்
இன்னிக்கே பட்டணம் போங்க
பக்கம் வந்து சேர்ந்திடறேன்
பரிசம் போட வெறசா வாங்க.....