திங்கள், 26 மார்ச், 2012

பிற்பகல் 6:28:00 - , No comments

நீதான் !இன்னல்கள் பல

இருதயத்தின்

இடதுபுறம் குத்தும்.


அவமானங்கள்-உன்

அறிவுத்திறனை

அசிங்கப்படுத்தும்.


சந்தர்ப்பங்கள்-உன்

சாதனைப்பக்கங்களில்

எச்சில் துப்பும்.


உனது நடைபாதையில்

முட்கள் மட்டுமே

முண்டியடித்து முளைத்திருக்கும்.


வானத்தை

வெறித்துப்பார்ததே

வயது முதிர்ந்திருக்கும்.


கண்கள் கண்ணீர்

வடிக்காது-ஆனால்

நெஞ்சு மட்டும்

கொதிக்கும்.


வேலை கேட்ட

விண்ணப்பித்த இடமெல்லாம்

'நாய்கள் ஜாக்கிரதை'

அறிவுப்பு பலகையே

அதிகம் தொங்கும்.


உறவுகளெல்லாம் கூடி

உதவாக்கரையென

அடிக்கடி உச்சரிக்கும்.


எதிர்வீடும்

அண்டைவீடும்

எள்ளி நகையாடும்.


தொப்புள்கொடி

உறவில் கூட

தொய்வு ஏற்படும்.


கண்களுக்கு

காலைச்சூரியன்

கனவில் மட்டுமே

உதிக்கும்.


முழுநிலவும்

உன்னைக்காணாது

முகம் மறைத்துப்போகும்.


அவ்வப்போது

சிந்தனை நரம்புகள்

சிதறிச்சேரும்.


இத்தனையும்

உனக்குள் சப்தமில்லாமல்

மொத்தமாக நிகழ்கிறதா?


துவண்டு போகாதே

தொடர்ந்து வா!

வரும்

நூற்றாண்டின்

சாதனையாளனே

நீதான்.......


0 கருத்துகள்: