சனி, 7 மே, 2011

வெள்ளி, 6 மே, 2011

பட்டணத்து மச்சானும் ...

பட்டணத்து மச்சானும் பட்டிக்காட்டு மச்சினியும் )


                                 
மச்சான்:

கண்மாய்க் கரையோரம்
களத்து மேட்டோரம்
வண்ணான் தொறையோரம்
வளைஞ்சு ஓடும் வரப்போரம்
நாணல் புல்லாட்டம்
நடையளந்து போறபுள்ள
நாங்கூறும் சங்கதிய
நாலு வார்த்தை கேளுபுள்ள...

மச்சினி:


சவுக்கு மரமாட்டம்
சந்தன மரமாட்டம்
உதிக்கும் நிலவாட்டம்
உருண்டோடும் தண்ணியாட்டம்
வெளஞ்ச நெல் போல
வெவரமாப் பேசுற மச்சான்
வெறசாச் சொல்லிப் போங்க
வெறகு எடுக்க நான் போணும்...

மச்சான்:

பூசணிக் கொடி போல
பூத்து நின்னவளே!
உதட்டுச் சிரிப்பால
உசிரறுத்துப் போறவளே ...
பூங்காத்து வீசியிருக்கு
புளியம்பூ பூத்திருக்கு
அத்தமக உனைப்பார்க்க
அடிமனசு பசிச்சிருக்கு...

மச்சினி :


எட்டுமைலு தாண்டி
இளந்தமுள்ளு வேலிதாண்டி
பட்டமர விறகு தேடி
பாதகத்தி நான் போறேன்...
உச்சி வெயிலுக்குள்ளே
வூடு போய்ச் சேரணும்
ஒக்காந்து பேசினா
எம்பொழப்பு போயிரும்...

மச்சான்:


அரைச்ச சந்தனம் நீ
ஆகாச சூரியன் நீ
உள்ளத்தில் குதிச்சு - என்
உயிரள்ளிக் குடிச்சவ நீ ...
தனியாகத் தவமிருக்கேன்
தவம் கிடந்து பசிச்சிருக்கேன்
உன்னோடு சேரத்தான்
உசுறு வச்சுக் காத்திருக்கேன் ...

மச்சினி :

பட்டமர விறகுலதான்
பாதகத்தி பொழப்பிருக்கு
பட்டியாடு மேய்ப்புலதான்
பசிக்கும் வயிறு நெறஞ்சிருக்கு
ஓட்டுப் போட்ட உடையிலதான்
உடல்கூட மறைஞ்சிருக்கு
ஒதுங்கிப்போன குப்பைகிட்ட
ஒங்களுக்கென்ன புடுச்சிருக்கு?

மச்சான்:


பட்டணத்து மச்சானிருக்க
பட்டமர விறகு எதுக்கு
பால்சோறு பக்கமிருக்க
பட்டியாடு மேய்ப்பெதுக்கு...
ஒட்டுப்போட்ட உடைக்குள்ளே
ஓவியந்தான் மறைஞ்சிருக்கு
ஒதுங்கிப்போன குப்பையில
ஒசந்த நிலா ஒளிஞ்சிருக்கு ...

மச்சினி :


இங்கிலீசு படிச்சவுக
இங்கிதம் தெரிஞ்சவுக
பட்டணத்தில் படிச்சு
பாராட்டு பெத்தவுக 
பாறாங்கல்லு மேல
பூப்பூக்க வாய்ப்பில்ல
பட்டிக்காட்டு பருத்தியிவ
படிச்சதெல்லாம் ஒண்ணுமில்ல...

மச்சான் :

கூவும் குயில் ராகம் கற்க
குருகுலம் போனதில்ல
விந்தை செய்யும் மின்மினிகள்
விஞ்ஞானம் கற்றதில்ல
பாட்டுப் பாடும் பறவையெல்லாம்
பாடம் கற்றுப் பார்த்ததில்ல
பாசத்தோடு நீயிருக்க
படிப்பெதுக்கு வாடிபுள்ள ...

மச்சினி :

பருவம் நெறஞ்ச சூரியனே
பாசம் பழுத்த சந்திரனே
அடிமாட்டுச் சிறுக்கிமேல
ஆசைப்பட்ட மம்முதனே
நரக நதிவழியே
நடையளந்து போறவள
நெஞ்சுக்குள்ளே தைக்காதீக
நேசம் வச்சு போகாதீக...

மச்சான் :


மனசுக்குள்ளே நின்னுக்கிட்டே
மல்லிகைப்பூ பறிச்சயடி
மத்தாப்பாச் சிரிச்சுக்கிட்டே
மனச ஒடச்சுப் போறயடி...
இலவம் பஞ்சே உனக்காக
இளைய மகன் நோகுறேன்
இல்லேன்னு சொல்லிவிடு
இப்போதே சாகுறேன்...

மச்சினி:


உசுறு வச்சுப் போற மச்சான்
உள்ளம் கலங்கிப் போகாதீக
அடிமாட்டுச் சிறுக்கி என்ன
அழவச்சுப் பார்க்காதீக.
இங்கிலீசு படிச்ச மச்சான்
இன்னிக்கே பட்டணம் போங்க
பக்கம் வந்து சேர்ந்திடறேன்
பரிசம் போட வெறசா வாங்க.....

சனி, 23 ஏப்ரல், 2011

சாதீ !




என் தாயின் 
கருவறையில் 
நான் தவழும்போதே
எனக்கு
ஜாதியின் உச்சரிப்பு 

கேட்டிருந்தால்
கருவறையிலேயே
கருகிப்போயிருப்பேன்.... 



குழந்தைகள்





பருவப் பார்வைகளின்
பரிசுகள்.

நீண்ட இரவுகளின்
விடியல்கள்.

கட்டில் கலவரத்தின்
தொட்டில் சமத்துவங்கள்.

தரையில் நடைபழகும்
தங்கத்தேர்கள்.

இருட்டுக்குள் கருக்கொண்ட
நட்சத்திரங்கள்.

பெண்மைக்குத் தாய்மையளித்த
சந்ததிச் சூரியன்கள்.

சிரிப்பு பூக்கள் தூவும்

தேவதைகள்.

சிணுங்கி அழுது சிரிக்கும்

சித்திரங்கள்.

இடுப்பு பல்லக்கிலேறும்

இறைவன்கள்.

இல்லற வனத்தின்

இனிய வசந்தங்கள்.

மனிதனைத் தெய்வமாக்கும்

மகத்துவங்கள்.


இசையாய்

காற்றில் உதிரும்
இலைகளின்
மௌனம்...

பூக்களின் உதடுகளில்
வண்டுகளிடும் 
முத்தம்...

பூவாய்த்திறக்கும்
மொட்டுக்களின்
ரகசிய சப்தம்...

கூட்டினைவிட்டு
வெளியே வரும்
நத்தையின் நகர்வு...

பூமியின் தோள்களில்
சூரியன் எழுதும்
அதிகாலை விடியல்...

வானம் நானும்
அந்திப்பொழுதின்
மழைத்தூறல்...

பூக்களின் தலைவார
புறப்பட்டு வரும்
தென்றல்...

முதன் முதலாய்
பூமி பார்க்கும்
சாதி வர்ணம் பூசப்படாத
மழலையின் அழுகுரல்...


வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மௌனம்...












விழிகளால்

மொழிகள் பேசி

விரல்களால்
சைகை காட்டி


அரும்பிய புன்னகையால்
இதழ் விரித்து


மௌனித்த இதயத்தால்
நேசம் தடவி 

தரை நிலவாய் - நீ
தடம் பதித்து   போகிறபோது

உன் கொலுசின்  சப்தங்கள்
என் காதல்  குருத்துக்களை
முத்தமிட்டு  போகுதடி...